செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், துத்திப்பட்டு பகுதிக்கு விரைந்த தனிப்படை போலீசார், அப்பகுதியில் சிலர் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததை அறிந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை பிடித்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (29), மேல் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (25), ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த 3 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனம் மற்றும் 1.100 கிலோ கஞ்சாவை ஆகியவற்றை பறிமுதல் செய்து உமராபாத் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து உமராபாத் காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.