திருநெல்வேலி மாவட்டத்தில் ஆடு வியாபாரி காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ரூ.12 ஆயிரத்திற்காக ஆடு வியாபாரியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி (57). இவர் கறிக்காக ஆடு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ள நிலையில் அவர் வெளியூரிலிருந்து தற்போது தந்தை வீட்டிற்கு விசேஷ நிகழ்ச்சி ஒன்றிற்காக வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் மாயாண்டி கடந்த 26 ஆம் தேதி தனது மகள்களுக்கு அசைவ உணவு சமைத்துக் கொடுக்க கறி எடுத்துக் கொடுத்துவிட்டு சமையலுக்கு தேவையான தக்காளி வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்ப வராத நிலையில் மாயாண்டியின் மனைவி மற்றும் உறவினர்கள் அவர் வழக்கமாக செல்லக்கூடிய இடங்களில் தேடிய நிலையில் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.
தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருப்பார் என எண்ணி வீட்டிற்கு சென்ற உறவினர்கள் மறுநாள் மதியம் வரை அவர் வீட்டுக்கு வராத காரணத்தினால் தச்சநல்லூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். காவல்துறையினரும் மாயாண்டியை தேடி வந்த நிலையில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அதிருப்தி அடைந்த மாயாண்டியின் குடும்பத்தார் மற்றும் ஊர்காரர்கள் நெல்லை தச்சநல்லூர் - மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் அனிதா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து தச்சநல்லூர் போலீசார் மாயாண்டியை தேடும் பணியில் ஈடுபட்ட போது தாழையூத்து அருகே உள்ள சிதம்பர நகர் காட்டுப்பகுதியில் மிகவும் மோசமான நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் தாழையூத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிதம்பர நகர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது மாயாண்டியின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்பட்டு இருந்ததும் உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டது.
தச்சநல்லூர் போலீசார் ஏற்கனவே மாயாண்டி காணாமல் போனது தொடர்பாக பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மாயாண்டியை அவருடன் ஏற்கனவே பழக்கத்தில் இருந்து மதன் என்பவர் அழைத்துச் சென்றது பதிவாகி இருந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் திருப்பூர் பகுதியில் பணி செய்து வந்த மதனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதன் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
“மாயாண்டி ஏற்கனவே ஆடு விற்கும் தொழில் செய்யும்போது நான் அவருடன் பழக்கமானேன். மாயாண்டியிடம் எப்போதும் பணம் புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அவரிடம் இருந்து பணத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அழைத்து சென்று வலுக்கட்டாயமாக மது வாங்கி கொடுத்தேன். அவரிடம் இருந்த பன்னிரண்டாயிம் ரூபாயை எடுக்க முயற்சி செய்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எனது நண்பர்களுடன் இணைந்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன்” என போலீசார் விசாரணையில் மதன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொலை செய்யும்போது மதனுடன் இருந்த நண்பர்கள் யார் எங்கு இருக்கிறார்கள் என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு தலைமறைவாக இருக்கக்கூடிய நபர்களை தேடி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ரூபாய் 12000 பணத்திற்காக ஆடு வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே காணாமல் போய் ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தொடர்ந்து 2வது நாளாக நெல்லை கரையிருப்பு பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.