சென்னை அம்பத்தூரில் ஒன்றரை வயது ஆண் குழந்தை 'லாக்டவுன்' கடத்தல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஒன்றரை வயது குழந்தை ‘டாக்டவுன்’ கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த குழந்தை `லாக்டவுன்’-ஐ மர்ம நபர்கள் தூக்கி செல்வது, அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில், கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் காந்தி நகர் பகுதியில் `ரயில் விகார்’ என்ற ரயில்வே குடியிருப்பில் கட்டுமான பணியிடத்தில் அங்கேயே தங்கியிருந்து - அங்கேயே பணிபுரியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் கிஷோர் - புத்தினி. இத்தம்பதியரின் 1.5 வயது குழந்தை `லாக்டவுன்’.
கடந்த 6ம் தேதி, இக்குழந்தை காணாமல் போனது. இதுதொடர்பாக பெற்றோர் இருவரும், 7-ஆம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்திவு செய்து காவல்துறையினர் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். அப்படியான நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர் காவல்துறையினர்.
குழந்தையை யார் கடத்தினார்கள் என்பது குறித்து சிசிடிவி கேமரா காட்சிகளின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. அம்பத்தூர் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில், தனிப்படை காவல் ஆய்வாளர் ராமசாமி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் குற்றவாளிகள் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்தனர். அதன்படி கடலூரை சேர்ந்த வளர்மதி, சைட் இன்ஜினியர் பாலமுருகன், கட்டட தொழிலாளி துஷாந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தற்போது அவர்களை சென்னை அழைத்து வந்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் `குழந்தை ஏன் கடத்தப்பட்டார்? குழந்தை கடத்தலின் பின்னணி என்ன’ என்பது போன்று விசாரிக்கப்படும் என்றும், `எத்தனை குழந்தைகள் இவர்களால் இதுவரை கடத்தப்பட்டனர்?' என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.