புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் இயங்கிவந்த போலி மதுபான தொழிற்சாலையை கண்டுபிடித்த போலீசார், 4 பேரை கைதுசெய்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் மற்றும் இரண்டாயிரம் லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்து சொர்ணா நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு பல குடியிருப்புப்பகுதிகள் உள்ளன. அதேபகுதியில் ரைஸ் மில் ஒன்றும் இயங்காமல் மூடியே கிடந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனிநபர் ஒருவர் வாடகைக்கு எடுத்து ரைஸ்மில்லை இயக்குவதாகக் கூறியுள்ளார். வாடகை எடுத்த நபர் அங்குள்ள குடோனில் ரகசியமாக போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருவ்சதாக போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்பேரில் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடியாக நடத்திய சோதனையில் போலி மதுபானப் பாட்டில்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை இயங்குவதை கண்டுபிடித்தனர். பல முன்னணி நிறுவனங்களின் பெயரில் ஆயிரக்கணக்கான போலி மதுபானப் பாட்டில்கள் எரி சாராயத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து போலி மது பாட்டில்கள் தயாரித்துவந்த ரெட்டியார்பாளையம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த இளங்கோவன் (64), பாகூர் பகுதியைச் சார்ந்த அழகர், விழுப்புரம் மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான பிரகாஷ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளி மனோஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் போலியாக தயாரித்து விற்பனைக்கு அனுப்ப தயாராக வைத்திருந்த 6000 ஆயிரம் மது பாட்டில்கள், 2,279 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர். புதுச்சேரியிலிருந்து தமிழகப்பகுதிகளுக்கு மதுபாட்டில்கள் அதிகளவு கடத்தப்படுவதால், இதுபோன்ற போலி மதுபான ஆலைகள் பல இடங்களில் ரகசியமாக இயங்கி வந்தாலும் ஒரு சில ஆலைகள்தான் பிடிபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.