தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடந்து சிபிஐ மறுவிசாரணை நடத்தக் கோரி நீதிமன்றம் முன்பாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018-ல் மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 101 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்மீதான விசாரணை, மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அவ்வழக்கு நீதிபதி பசும்பொன் சண்முகையா முன் விசாரணைக்காக வந்தது. வழக்கு பதிவு செய்யப்பட்ட 101 பேரில் 27 நபர்கள் ஏற்கனவே ஆஜராகி இருந்ததால், மீதமுள்ள 74 பேர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 64 பேர் மட்டுமே இன்று ஆஜராகினர்.
விசாரணை தொடக்கமாக வழக்கில் ஆஜரான அனைவரின் பெயர் விவரங்கள் நீதிபதியால் சரிபார்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வழக்கில் இன்னும் பத்து நபர்கள் ஜூன் 6-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தின் வெளியே வழக்கில் ஆஜராக வந்தவர்கள் சிலர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் மத்திய சிபிஐ-க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோஷம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் “இந்த வழக்கை பொறுத்தவரை ’காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி சூட்டில் என்ன பங்காற்றினார்கள்’ என்று விசாரணை செய்து கண்டறிய வேண்டும் என்பதற்காகத்தான், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனால் இன்றைக்கு அப்பாவி பொதுமக்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் தமிழக அரசு நேரடியாக தலையிட வேண்டும் என்று அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். குறிப்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கையை, தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்” என தெரிவித்தார்.