சென்னையில் ஏடிஎம்-களில் புதுவிதமான முறையில் லட்சக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், திருவாரூரில் வங்கி ஊழியரே ஏடிஎம் இயந்திரத்தில் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சியால் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் அருகே விளமலில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்-ல் பணம் நிரப்புவதற்காக கடந்த 14-ஆம் தேதி வங்கி அதிகாரிகள் சென்றபோது ஏற்கெனவே இருந்த பணத்தில் இரண்டு லட்சத்து ஆறாயிரம் ரூபாய் குறைந்திருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்காமல் பணம் கொள்ளை போனது பற்றி புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆராய்ந்தபோது வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிவரும் இளையராஜா என்பவர் காலை எட்டு மணிக்கு வங்கி மேலாளர் அறைக்குச் சென்று அங்கிருந்த ஏடிஎம் சாவி மற்றும் ஏடிஎம் ரகசிய குறியீட்டை எடுத்துக் கொண்டு ஏடிஎம்-ஐ திறந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
வங்கி மேலாளர் வினோத்குமார் சிங் விடுமுறையில் இருந்ததை அறிந்து சாவியையும் ரகசிய குறியீட்டை எடுத்து கொள்ளையடித்ததாக இளையராஜா கூறியிருக்கிறார். இதையடுத்து கைது செய்யப்பட்ட இளையராஜா நீதிபதிமுன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.