திருவாரூர் அருகே பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கடாரம் கொண்டானைச் சேர்ந்த ஜெயபாரதி என்பவர் கணவரைப் பிரிந்து குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். தப்பளாம்புலியூர் அஞ்சல் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் அவர், வெள்ளியன்று மாலை வீடு திரும்பும்போது கார் மோதி உயிரிழந்ததாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், தங்கள் மகள் கார் ஏற்றி கொல்லப்பட்டிருப்பதாக ஜெயபாரதியின் பெற்றோர் திருவாரூர் தாலுகா காவல் துறையினரிடம் புகார் எழுப்பினர்.
ஜெயபாரதியைப் பிரிந்து அமெரிக்காவில் பணியாற்றும் அவரது கணவர் விஷ்ணு பிரகாஷ், விவாகரத்து கேட்டு வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு தங்கள் மகள் மறுத்ததால் கொலை செய்திருக்கலாம் என்றும் கூறினர். விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், ஜெயபாரதி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கார் ஒன்று பின்தொடர்ந்து சென்ற சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றினர். காரை ஓட்டிச் சென்ற ஜெகனை பிடித்து விசாரித்தபோது, விஷ்ணு பிரகாஷின் மைத்துனர் செந்தில் காரால் மோதி ஜெயபாரதியை கொன்றுவிடுமாறு சொன்னதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதை விபத்து போல பிறர் நம்புவதற்காக காரை மரத்தில் மோதியதாகவும் ஜெகன் கூறியுள்ளார். இதையடுத்து விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்ற காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.