தேங்காய் உடைத்து, பூஜை செய்துவிட்டு பிறகு திருடுவதை வழக்கமாக வைத்திருந்த கும்பலை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில், முலுண்ட், தானே, டோம்பிவிலி, கல்யாண், நவி மும்பை போன்ற பகுதிகளில் அடிக்கடி பூட்டை உடைத்து திருட்டு நடப்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சமீபத்தில் நடந்த ஒரு திருட்டில், சம்பவம் நடந்த வீட்டுக்கு வெளியே, பூஜை செய்யப்பட்டிருந்தது. ஒரு மஞ்சள் பை, பூ, பழம் போன்றவை அங்கு கிடந்தன. அதைக் கண்ட போலீசார் அலர்ட் ஆகினர். ஏனென்றால் இதற்கு முன் நடந்த சம்பவத்திலும் திருடப்பட்ட வீட்டின் முன், இப்படி பூஜை சாமான்கள் கிடைத்தது.
இதனால் போலீசார் இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இதுபோன்ற திருட்டில் ஈடுபட்ட நிர்மன் ஆறுமுகம் ஷெட்டி, சக்திவேல் நிர்மல், பிரவின் கெய்க்வாட், யஷ்வந்த் ஆகியோரை பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி, அய்யப்ப நாராயணன் செட்டியார், ஹிமன்சு, ரோகித் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதுபற்றி நவ்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறும்போது, ‘இந்தக் கும்பல் எந்த வீடு அதிக நாட்களாக பூட்டிக்கிடக்கிறது என்று நோட்டமிடும். பிறகு அங்கு திருட முடிவு செய்வார்கள். சம்பந்தப்பட்ட வீட்டின் முன் பூஜை செய்வார்கள். பிறகு அந்த பகுதியில் உள்ள ஜங்ஷனில் தேங்காய் உடைப்பார்கள். அதைக் கண்டு, இவர்கள் டீமில் உள்ள மற்றவர்கள் திருட்டு நடக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு வருவார்கள். இப்படி பல்வேறு பகுதிகளில் இந்தக் கும்பல் திருட்டை நடத்தியுள்ளது’ என்றார்.
அவர்களிடமிருந்து திருட்டுக்குப் பயன்படுத்திய பொருட்களை கைப்பற்றியுள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.