ரூ.80 லட்சம் 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் ரூ.1 கோடிக்கு ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டுகள் தருவதாகக் கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.60 லட்சம் பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா, பணையாக்கோட்டை பகுதியைசி சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் புராஜக்ட் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது சொந்த ஊருக்கு வந்த வெள்ளையப்பனிடம் அதே ஊரைச் சேர்ந்த விஜயக்குமார் மற்றும் அவரது நண்பரான தஞ்சாவூரைச் சேர்ந்த கோவிந்தன் ஆகியோர், ரூ.80 லட்சத்திற்கு 500 ரூபாய் நோட்டுகள் தந்தால், ரூ.1 கோடிக்கு 2000 நோட்டுகள் தருவதாக கூறியுள்ளனர்.
பினாமி பெயரில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை இது போன்று பல இடங்களில் மாற்றி வருவதாகவும் ஆசை வார்தை கூறியுள்ளனர். இதை நம்பிய வெள்ளையப்பன், தனது நிறுவன உரிமையாளரிடம் கூறி, ரூ.60 லட்சத்திற்கான 500 ரூபாய் நோட்டுகளை ஏற்பாடு செய்து, ரூ.60 லட்சம் கொடுக்கிறேன் எனக்கு ரூ.75 லட்சம் தரும்படியும் வெள்ளையப்பன் கேட்டுள்ளார். இதற்கு விஜயக்குமார் மற்றும் கோவிந்தன் ஆகியோர் சம்மதித்து பணத்துடன் தேனிக்கு வரும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளையப்பன் தனது நிறுவன உரிமையாளருடன் காரில் தேனிக்கு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் விஜயக்குமார், கோவிந்தன் மற்றும் அவரது கூட்டாளிகளான தேனி வீரபாண்டியைச் சேர்ந்த யுவ காத்திக், சண்முகம் ஆகியோர் இரண்டு கார்களில் அங்கு வந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளையப்பன் பணம் கொண்டுவந்திருப்பதை உறுதி செய்த அந்த கும்பல், கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் சென்று பணத்தை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஒரு காரில் சென்றால் போதும் என்று கூறி வெள்ளையப்பன் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளரை காரில் அழைத்துக் கொண்டு, கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத நிலையில், பணத்துடன் வந்தவர்கள் பயந்துபோய் யாருமே இல்லாத இடத்தில் பங்களா இருப்பதாக அழைத்து செல்கிறீர்களே என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி பணத்தை கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர். இதனால் மிரண்டு போன இருவரும் பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் அதே பகுதியில் இறக்கி விட்டுவிட்டு பணத்துடன் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளையப்பன் கண்டமனூர் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீரபாண்டியைச் சேர்ந்த யுவராஜ், கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனியார் நிறுவன ஊழியரிடம் பறித்த பணத்தை அந்த கும்பல், இரண்டு பிரிவாக பிரித்து எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது இதையடுத்து கைது செய்தவர்களிடமிருந்து 2.5 லட்சம் ரூபாய் பணம், இரண்டு கார்கள், 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான பத்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், பணத்தை மீட்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நிறுவன ஊழியரிடம் ஆசைவார்தை காட்டி நூதன முறையில் ரூ.60 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.