ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக வழக்கறிஞர் படுகொலை: 4 பேர் கைது

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக வழக்கறிஞர் படுகொலை: 4 பேர் கைது
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக வழக்கறிஞர் படுகொலை: 4 பேர் கைது
Published on

தேனி அருகே வழக்கறிஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக நடந்துள்ள இச்சம்பவத்தில் 4 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் (42). இவர் நிலப்பிரச்னை காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டி பகுதியில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் காவல் துறையினர் வழக்கறிஞர்கள் மதன், ஜெயபிரபு, கார் ஓட்டுநர்களான சூப் செல்வம், ஆனந்தன், மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ராஜேஷ், சஞ்சய், ராஜா, வேல்முருகன் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு வழக்கறிஞர் சொக்கர் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தும், தலைமறைவாக இருந்த மூதாட்டி மயிலம்மாள் என இதுவரை 10 பேர் வரை கைது செய்யப்பட்ட நிலையில். பின்னர் பிணையில் வெளிவந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த ரஞ்சித்குமாரின் மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் தொடர்புடைய கூடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மதன் (39) என்பவர் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் அலுவல் பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போதுகாரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகம் அருகே அவரை இடித்து கீழே தள்ளியது.

அதில், நிலைகுழைந்து விழுந்த மதனை கண் இமைக்கும் நேரத்தில் சராசரியாக வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மதனை மீட்ட அக்கம் பக்கத்தினர் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மதன் உயிரிழந்தாக தெரிவித்தனர். இதையடுத்து உடற்கூறாய்விற்காக சடலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே மதனை வெட்டிய கும்பல் காரில் தப்பியோட முயன்ற போது, உத்தமபாளையம் - அம்மாபட்டி சாலையில் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். இதில் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஞ்சித்குமாரின் தந்தை கருணாநிதி (70), சகோதரர்கள் செல்வேந்திரன் (47), சுதேசி (36), மற்றும் உறவினர் குமார் (45) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், ரஞ்சித்குமாரின் மரணத்திற்கு பழி வாங்குவதற்காக மதனை படுகொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இது குறித்து உத்தமபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com