தேனி மாவட்டம் கம்பம் கிராம சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சௌந்தரவேல் - பாண்டீஸ்வரி தம்பதியர். இவர்கள் கேரளாவில் ஏலத்தோட்ட தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது மகள் சினேகா என்பவருக்கும் போடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், கருவுற்ற சினேகா தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்துள்ளார். இதையடுத்து சினேகாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோர் கேரளாவில் தோட்ட வேலைக்குச் சென்ற நிலையில், சினேகா தனது குழந்தையுடன் தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக் கிழமை) காலை சினேகா, தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார். பாட்டியும் கடைக்குச் சென்றுள்ளார். சினேகா குளித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது தொட்டிலில் குழந்தை இல்லாதது கண்டு பதறியுள்ளார். கடைக்குச் சென்று திரும்பிய பாட்டியும் குழந்தையை எடுத்துச் செல்லவில்லை எனத் தெரிந்ததும் குழந்தையை காணாத சினேகா, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்த உத்தமபாளையம் டிஎஸ்பி மதுக்குமாரி மற்றும் கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் சினேகாவின் உறவினர்கள் குழந்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது காவலர்கள் சினேகாவின் வீட்டில் இருந்த பால் கேன் ஒன்றில் குழந்தை கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அதிலிருந்து குழந்தையை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை வீட்டில் இருந்த பால்கேனில் வந்தது எப்படி? குழந்தையை கடத்தியவர்கள் யார்? குழந்தை இறப்பிற்கு யார் காரணம் என்பது குறித்து சினேகாவின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதோடு, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, குழந்தை கடத்தப்பட்ட நேரத்தில் அந்த வழியாக கடந்து சென்ற குறிசொல்லும் குடுகுடுப்பைக்காரரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.