16 லட்சம் லஞ்சம்... கையும் களவுமாக சிக்கிய தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர்! #Video

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேண்டீன்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவதற்காக கேண்டீன் உரிமையாளரிடம் 16 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக அக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவு

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம், மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் கேட்டு பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோவும் பரவியது. இதனையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், மாவட்ட இணை மருத்துவ இணை இயக்குநர் நேரில் சென்று, உணவக உரிமையரிடம் விசாரணை நடத்தினர்.

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்
தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

அதன் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மையென தெரியவந்ததாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள, பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக பரவிய வீடியோ குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் புதிய தலைமுறையிடம் அப்போதே பேசுகையில், “வீடியோவில் வரும் காட்சிகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை. நான் லஞ்சம் வாங்கி இருந்தால் அதை ஒப்பந்ததாரர் வீடியோவாக வெளியிட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர் நினைத்ததெல்லாம் நடந்து இருக்கும். எனவே நான் தவறு செய்யவில்லை.

இந்த வீடியோ வெளியாகாமல் இருக்க இரண்டு செய்தி ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் மற்றும் ஒரு வக்கீல் என்னிடம் பேரம் பேசினர். நான் அவர்களிடம் ‘தாராளமாக வீடியோவை வெளியிடுங்கள். தவறு செய்தால்தானே எனக்கு பயம்’ என சொல்லிவிட்டேன். இதை செய்தியாக ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது 2 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன். இதுகுறித்து ஆவணங்களுடன் செய்தியாளர்களை சந்திப்பேன்” என கூறியிருந்தார்.

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மீனாட்சி சுந்தரம்
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மீனாட்சி சுந்தரம்

அப்படியான சூழலில் அவரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சக செய்தி குறிப்பில், “தேனி மருத்துவக் கல்லூரி உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் கேட்டுப் பெற்றதாக டீன் மீனாட்சி சுந்தரம் குறித்து ஊடகத்தில் வெளியான செய்தி அடிப்படையில் மாவட்ட சுகாதாரம் மற்றும் ஊரகப் பணிகள் இணை இயக்குநர் விசாரணை நடத்தியது. அதில் அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதால் டீனை தற்காலிக பணிநீக்கம் செய்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com