வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 68,200 ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அம்மாகுளம் பகுதியில் செல்ல மாரியம்மன் ஆண்கள் சுயஉதவிக் குழு இயங்கி வருகிறது. இதில் 11 பேர் உறுப்பினராக உள்ளனர்.
இந்நிலையில், இவர்களிடம், அருள் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் அருள்செல்வி (50) என்பவர் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி பெற்றுத் தருவதாகக் கூறி தலா ஒவ்வொரு நபரிடம் 6,200 ரூ வீதம் 11 பேரிடம் 68,200 ரூபாய் ரொக்கமாக பெற்றுள்ளார்.
பின்னர் கடனும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து காலம் கடத்தியுள்ளார். இந்நிலையில், இன்று ஆண்கள் சுயஉதவிக் குழுவின் தலைவர் செந்தட்டி காளை மற்றும் சிலர் சேர்ந்து அருள் செல்வியிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவர்களை அசிங்கமாக திட்டிய அருள் செல்வி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து அக்குழுவின் தலைவர் செந்தட்டி காளை போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த நகர் காவல் துறையினர் வங்கி கடனுதவி வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட அருள் செல்வியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.