சென்னையில் ஸ்கிம்மர் மிஷினை பயன்படுத்தி ஏ.டி.எம் அட்டையை போலியாக தயாரித்து பணம் எடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் திருச்சி சென்னூரை சேர்ந்த ஜெயராமன்(29) என்பவர் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பெட்ரோல் போட வந்தவர்களில் 19 நபர்களின் ஏ.டி.எம். அட்டை விவரங்களை ஸ்கிம்மர் கருவி மூலம் பதிவு செய்து பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார்.
இது தொடர்பாக புகார் எழுந்தவுடன் நீலாங்கரை போலீசார் ஜெயராமனை பிடித்து விசாரித்ததில் போலி வங்கி அட்டை தயாரித்து பணம் எடுத்ததாக ஒப்புக் கொண்டார். மேலும் இதில் தொடர்புடைய கணேசமூர்த்தி(26) மற்றும் ஜெயராமன் இருவரும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை நீலாங்கரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து ஸ்கிம்மர் கருவி, ஒரு லேப்டாப், டேட்டா கேபிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.