ஓமலூர் அருகே தேர்த்திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற இளைஞரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காருவள்ளி கிராமத்தில் உள்ள சின்னதிருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் தேரோட்டம் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேருக்கு முன்பாக இளைஞர்கள் பலர் நடனமாடியபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ராஜமாணிக்கம் என்ற போலீஸ் நடனமாடியபடி வந்த இளைஞர்களை ஓரமாகச் சென்று நடனமாடுமாறு கூறியுள்ளார்.
இதனால், கோபமடைந்த இளைஞர் ஒருவர் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்டனர். ஆனால், கூட்ட நெரிசலில் புகுந்த அந்த இளைஞர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து தலையில் அடிபட்ட காவலர் ராஜமாணிக்கம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய நபர், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பாபிசெட்டிபட்டியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றவாளி முரளி கிருஷ்ணனை ஒரு வாரத்திற்கு பின் போலீசார் கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.