கோர்ட்டிற்கு செல்லும் வழியில் தப்பித்து ஓடிய கைதி செய்த விநோத காரியம்! இதுக்கு ஏன்யா ஓடுன?

கோர்ட்டிற்கு செல்லும் வழியில் தப்பித்து ஓடிய கைதி செய்த விநோத காரியம்! இதுக்கு ஏன்யா ஓடுன?
கோர்ட்டிற்கு செல்லும் வழியில் தப்பித்து ஓடிய கைதி செய்த விநோத காரியம்! இதுக்கு ஏன்யா ஓடுன?
Published on

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த கொண்டு செல்லும் போது, அந்தகைதி தப்பியோடி பின்னர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியைத் சேர்ந்தவர் வேல்முருகன்(59). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும், வீடு கட்டுவது தொடர்பாக முன்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி வீட்டில் வசிக்கும் தங்கபாண்டி(40) என்பவர், கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக வேல்முருகன் வீட்டின் முன்னால் இருந்த தேக்கு மரத்தை வெட்டியதாகவும், அதை தட்டிக் கேட்க சென்ற வேல்முருகனின் மனைவி மகாலட்சுமியை, தங்கபாண்டி அரிவாளால் வெட்ட வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக வேல்முருகன் மனைவி அளித்த புகாரின் பேரில், ம.ரெட்டியபட்டி போலீசார் தங்கபாண்டியை கைது செய்தனர்.

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் தப்பிச்சென்ற கைதி!

இதனையடுத்து இன்று தங்கபாண்டியை அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த ம.ரெட்டியபட்டி போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில், தங்கப்பாண்டியுடன் போலீசார் சாப்பிட்டுவிட்டு கிளம்பியுள்ளனர். அப்போது திடீரென தங்கபாண்டி போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடினார்.

2 மணி நேரத்திற்கும் மேலாக தேடியலைந்த போலீசார்!

இதைத்தொடர்ந்து ம.ரெட்டியபட்டி போலீசார் மற்றும் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ஒன்றாக சேர்ந்து, தங்க பாண்டியை அருப்புக்கோட்டை நகர் முழுவதும் சுமார் 2 மணி நேரமாக தேடியலைந்தனர். எவ்வளவு தேடியும் தங்கபாண்டியை கண்டுபிடிக்க முடியாமல் அயர்ச்சியடைந்த போலீசார், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளனர்.

தப்பியோடிய கைதி செய்த விநோத காரியம்!

தப்பியோடிய தங்கப்பாண்டி நேராக ஓடிச்சென்று அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவர் நீதிமன்றத்தில் சரணடைந்த விசயம், சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போலீசாருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் நீதிமன்றத்திற்கு சென்ற போலீசார் மற்ற செயல்முறைகளை மேற்கொண்டனர். ஆனால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கைதி எதற்காக தப்பியோடினார்?, பின் எதற்காக மீண்டும் வந்து நீதிமன்றத்திலேயே சரணடைந்தார்? என்ற குழப்பமான இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏன் தப்பி ஓடினார்? ஏன் மீண்டும் நீதிமன்றத்திலேயே சரணடைந்தார்?

எதற்காக தப்பியோடினார் என்று கைதி தங்கப்பாண்டிக்காக ஆஜரான வழக்கறிஞரிடம் கேட்ட போது, ”கொலை மிரட்டல் காரணமாக கைது செய்ததால், தன்னை சிறையில் அடைத்துவிடுவார்கள் என பயந்து, அவருக்கு தெரிந்த வழக்கறிஞரான தன்னிடம் வந்து, எப்படியாவது என்னை ஜாமினில் எடுத்துவிடுங்கள்” என கேட்டதாக வழக்கறிஞர் கூறினார்.

பிறகு அவரை நீதிமன்றத்தில் சரணடைய சொன்னதாகவும், பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அருப்புக்கோட்டையில் இந்த சம்பவம் சிறிது நேரத்தில் பெரிய பரபரப்பையே ஏற்படுத்திவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com