ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்தவருக்கு சீட்டுக் கட்டுகளை டெலிவரி செய்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை பள்ளிகரணை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்து குறைந்த விலையில் செல்போன் கிடைக்கும் என்ற ஆசையில் 2999 ரூபாய்க்கு செல்போன் ஒன்றை கடந்த 2ம் தேதி ஆர்டர் செய்துள்ளார். செல்போனுக்காக காத்திருந்த முகமது அலிக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் சீட்டு கட்டுகள் இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது அலி, டெலிவரி கொண்டு வந்த நபரை பிடித்து பள்ளிகரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். பணம் கொடுப்பதற்கு முன்பு பார்சலை பிரித்து பார்த்ததால் பணம் கொடுத்து ஏமாறாமல் தப்பியதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் டெலிவரி கொண்டு வந்தவருக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதால் அனுப்பி வைத்து விட்டனர். மேலும் புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.