மணல் கொள்ளைக்கு இடையூறாக இருந்ததால் ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிக்கொலை செய்ததாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திருநின்றவூர் அருகே கொசவன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் பரமகுரு (38). இவர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மேலும், இவர் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு ஷிபா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை பரமகுரு கொசவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததிபாளையத்தில் நடைபெறும் கால்வாய் பணிகளை பார்வையிட பைக்கில் சென்றுள்ளார். பின்னர், அவர் பணி நடைபெறும் இடத்தில் நாற்காலியில் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தபோது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, பரமகுரு செல்போனில் பேசிக்கொண்டே அங்கிருந்து நடந்தபடி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்துள்ளார். அருந்ததிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது 3 பைக்கில் வந்த கும்பல் அவரை வழிமறித்து வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பிறகு, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து பரமகுருவை ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பூந்தமல்லி- திருநின்றவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடினர். இந்நிலையில், கொலை தொடர்பாக திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், அப்பு, கலாநிதி, அய்யப்பன் ஆகிய 4 பேரை இன்று காலை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொசவன்பாளையம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் சிலர் மணல் திருடுவதை ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு கண்டித்ததாகவும் மணல் திருடினால் மாவட்ட கலெக்டர், போலீசாரிம் புகார் கொடுப்பேன் என அவர் மிரட்டியதாகவும் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஊராட்சி தலைவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் திருநின்றவூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,கொலை சம்பவத்தை அடுத்து கொட்டாம்பேடு கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.