திருச்செங்கோடு அருகே சக்தி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தன்னுடைய வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை கத்தியால் வெட்டியுள்ளார். இதைப் பார்த்த செந்தில்குமாரின் தாயார் சம்பூர்ணம் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோர் செந்தில்குமாரை பிடிக்கமுயன்றபோது அவர்களையும் கத்தியால் தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த சிறுமி, தங்கராசு, முத்துவேல் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஊரக காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்த நிலையில், அவரை மன நோயாளி எனக் கூறி காவல்துறையினர் தப்பிக்க வைக்க முயற்சிப்பதாகக் கூறி சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து சாலைமறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிறுமியின் தந்தை கதறியழுத காட்சி காண்போரின் கண்களில் நீரை வரவழைத்தது.