“ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவரை சிபிஐ விசாரிக்க வேண்டும்” - ஈஸ்வரன்

“ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவரை சிபிஐ விசாரிக்க வேண்டும்” - ஈஸ்வரன்
“ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவரை சிபிஐ விசாரிக்க வேண்டும்” - ஈஸ்வரன்
Published on

பொள்ளாச்சியில் இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில், முக்கிய குற்றவாளியை கைது செய்யக்கோரி பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பொள்ளாச்சியில் வசித்துவரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கனிவுடன் பழகிய திருநாவுக்கரசு மீது நன்மதிப்பு ஏற்பட்டதால், அந்தப் பெண் அவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார். 

இதைத்தொடர்ந்து தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்தப் பெண்ணை கடந்த 12-ஆம் தேதி காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அந்தப் பெண்‌ணை தங்களின் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்ததாக கூறப்படுகிறது. இதை வைத்து அவரிடமிருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ளார். அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். ஆகவே பொள்ளாச்சியில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் காவல்துறையை கண்டித்தும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரக் கோரியும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று திமுகவினர் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு, வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு சென்று வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக காவல்துறையும் ஆளும் கட்சியும் ஈடுபட்டு வருவதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர். 

இதேபோல பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அனைத்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக குற்றவாளிகளைக் கண்டித்து அவர்களை கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாதர் சங்கம் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் தலைமறைவாக உள்ள திருநாவுக்கரசு காவல்துறைக்கு சவால் விடும் விதமாக தினமும் சமூக வலைத்தளங்களில் காணொளி காட்சி மூலம் பேசி வருவது அதிர்ச்சியளிக்கும்படி இருப்பதாகவும் தமிழகத்தில் மகளிர் ஆணையம் என்பது செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் மாதர் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர். 

இதையடுத்து பொள்ளாச்சி பல்லடம் ரோடு அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்ப்பில் இப்பிரச்சினை தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டு அரசுக்கு எதிராகவும் மெத்தனமாக செயல்படும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார். இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

மேலும் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த வழக்கில் அரசியல் பின்புலம் இருப்பதால் பொன் மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com