பிரபல மருந்தகங்களின் பெயரை பயன்படுத்தி போலியான கணக்குகள் தயாரித்து ஆன்லைன் மூலம் மருந்து வாங்கும் நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது வடமாநிலக் கும்பல். அதிர்ச்சிகர மோசடி குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரபல ஆன்லைன் வர்த்தக தளத்தில் மருந்தக உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் முகவரியை பதிவு செய்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு குறிப்பிட்ட கடைகளின் முகவரியை கொண்டு போலியாக கணக்கு தொடங்கி கருப்பு பூஞ்சை, கொரோனா நோயாளிகளுக்கான மருந்துகளை விரைவாக டெலிவரி தருவதாக குறிவைத்துவருகின்றன மோசடி கும்பல்கள். ஆன்லைனில் மருந்துகளை தேடுவோரிடம் விரைவாக மருந்துகளை டெலிவரி செய்வதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இதனால் மருந்தக உரிமையாளர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வங்கி கணக்கை பார்த்போது கடை முகவரி சென்னை என்றும் வங்கி கணக்கு முகவரி மேற்குவங்கம், மேகாலயா முகவரிகளையும் காட்டுவதாக கூறுகிறார்கள் . இந்த மோசடிகள் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், மேலும், இன்டியா மார்ட் நிறுவனத்திற்கும் ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்வோர் இதுபோன்ற மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.