’நரபலி கொடுக்கப்பார்க்கிறார்’ - வளர்ப்பு தாய்க்கு பயந்து தமிழகத்தில் தஞ்சமடைந்த ம.பி பெண்!

’நரபலி கொடுக்கப்பார்க்கிறார்’ - வளர்ப்பு தாய்க்கு பயந்து தமிழகத்தில் தஞ்சமடைந்த ம.பி பெண்!
’நரபலி கொடுக்கப்பார்க்கிறார்’ - வளர்ப்பு தாய்க்கு பயந்து தமிழகத்தில் தஞ்சமடைந்த ம.பி பெண்!
Published on

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க பார்ப்பதால், தப்பித்து வந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் வேளாண்துறையில் பணியாற்றிய பிரேம்சந்த் சர்மா என்பவர், தன் மகள் ஷாலினி சர்மாவுடன் மத்திய பிரதேசத்தில் உள்ள ராய்சேன் மாவட்டத்தின் மாயாபுரி பகுதிக்கு குடியேறியுள்ளார். போபாலில் உள்ள அரசு மகாராணி லட்சுமிபாய் பெண்கள் கல்லூரியில் படித்த ஷாலினி சர்மா, ஊட்டச்சத்து தொடர்பான படிப்பில் முதுநிலைப் பட்டமும், யோகா தொடர்பான படிப்பில் டிப்ளமோவும் பெற்றிருக்கிறார். இந்நிலையில் பெற்றோரின் அறிவுறுத்தலின்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யில் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். அதில் சேர்வதற்கு முன்பாக நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

நரபலி கொடுக்க பார்ப்பதாக போலீசில் புகார்! கண்டுகொள்ளாத காவல்துறை!

இதனிடையே கொரோனா காலகட்டத்தில் 10 வயதான தனது சகோதரன் யேஷ் ஷர்மா உள்ளிட்ட மூவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்கும், அவரது வளர்ப்பு தாய் சுதா ஷர்மா நரபலி கொடுத்திருப்பதாக கண்டறிந்துள்ளார். அதை தெரிந்துகொண்டு அதிர்ச்சியடைந்த ஷாலினி சர்மா, தானும் நரபலி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்புக்கோரி போபால் காவல்துறையில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி ஆகியவற்றுடன் தன் வளர்ப்புத் தாய் தொடர்பில் இருப்பதால், அவருக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்கியதாகக் கூறப்படுகிறது.

தப்பித்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்த ஷாலினி!

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் ஷாலினி சர்மாவுக்கு உதவ முன்வந்த நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி கைது செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில் பிப்ரவரி 15ஆம் தேதி தப்பித்து, கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்த ஷாலினி, நண்பர் ஒருவரின் உதவியுடன் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் நிர்வாகி வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

நரபலி கொடுக்க பார்ப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

இதனைத்தொடர்ந்து வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமான தமிழகத்திற்கு வந்ததாகக் கூறி, தனக்கு பாதுகாப்பு வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, 23 வயதான ஷாலினி சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த அந்த மனுவில் ”வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்திரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர் எனவும், தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும்” அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச்சென்று விடுவர். அவ்வாறு அழைத்துச் சென்றுவிட்டால் நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது என மனுவில் கூறியிருந்தார்.

உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் உத்தரவாதம்!

இந்த வழக்கானது இன்று நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்ததது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், ஆன்லைனில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மனுதாரரான ஷாலினி ஆஜராகி, தனக்கு பாதுகாப்பு வழங்கிய தட்சிணாமூர்த்தி, விக்னேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

போபால் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

பின்னர் பேசிய நீதிபதி, இந்த நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகியவற்றை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவருக்கு உதவியாக இருந்த இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் எனக்கூறி, வழக்கு குறித்து ஷாலினி சர்மாவின் பெற்றோர் பதிலளிக்கவும், நரபலி தொடர்பாக ஷாலினி புகார் அளித்த விவகாரத்தில் போபால் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com