நேற்று சென்னையில் தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலின் முன் பக்கம் சத்யா என்ற பெண்ணை, ஒருதலைகாதலால் சதீஷ் என்ற இளைஞர் கொலை செய்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து சத்யாவின் அப்பாவிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்றிரவு அவர் அப்பா எதிர்பாராவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். இது மாணவியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவியை கொலை செய்தததாக சொல்லப்படும் சதீஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சத்யாவை பள்ளிப் பருவம் முதலே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சத்யா பிரிந்ததாக தெரிகிறது. கல்லூரி மாணவியான சத்யாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் வேறுஒரு நபருடன் திருமணம் நிச்சயமாகியதாக சதீஷ்க்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் வழக்கம்போல் கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யாவுடன், சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரயிலின் முன் சத்யாவை தள்ளிவிட்டார். வேகமாக வந்த ரயில் மோதியலில் சம்பவ இடத்திலேயே சத்யா உயிரிழந்தார். இதையடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவல் அறிந்து சென்ற ரயில்வே காவல்துறையினர், சத்யாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய சதீஷைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறை சார்பில் டி.எஸ்.பி வைரவன் தலைமையில் 4தனிபடையினரும், புனித தோமையார்மலை காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலிருந்த சத்யாவின் கல்லூரி தோழி மற்றும் தப்பியோடிய சதீஷின் தந்தை தயாளனிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே ரயிலில் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே மாணவியின் தந்தை நெஞ்சுவலியால் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இது, அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகள் மட்டுமன்றி, அவரின் தந்தையும் இழந்ததில் மீளா துயரத்தில் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.
மகள் சத்யாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சத்யாவின் தந்தை மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதியை ராம்குமார் கொலை செய்தது, 2021 ஆம் ஆண்டு தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஸ்வேதா கத்தியால் கொலை செய்யப்பட்டது, தற்போது சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா படுகொலை செய்யப்பட்டுள்ளது என தொடர்ந்து பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.