எண்பது திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் கைது

எண்பது திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் கைது
எண்பது திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் கைது
Published on

மூன்று குண்டாஸ் உட்பட 80 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி, கே.வி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவன் மீது வேலூர்,வாலாஜாபாத், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாமக்கல், தர்மபுரி, கோவை வடவள்ளி,துடியலூர், காட்டூர், பொள்ளாச்சி,காஞ்சிபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 3 குண்டாஸ் உட்பட 80 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் இவரை பிடித்த காஞ்சிபுரம் போலீசார் இவனிடமிருந்து ஒரு கிலோ நகை பறிமுதல் செய்து சிறையிடைத்தனர். கடந்த 3ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவாகிவிட்டார். அதன் பிறகு ஆறு இடங்களில் இரண்டு கிலோவிற்கு மேல் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளார். இதனனைத்தொடர்ந்து அவரைப் பிடிக்க போத்தனூர் கிரைம் ஏசி சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

இந்நிலையில் இவரது கூட்டாளி ஒருவரை நகை விற்க கொண்டு செல்லும்போது தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கைதான தகவல் தெரியாமல் அவரது செல்போனுக்கு மணிகண்டன் தொடர்புகொண்டதால் இந்த மொபைல் எண்ணை வைத்து தேடி வந்தனர். 

நேற்று முன் தினம் திண்டுக்கலில் ஒரு வீட்டில் திருடிவிட்டு அப்படியே ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்டார். பின் நேற்று அங்கிருந்து கேரளாவிற்கு சென்றார். பிறகு அங்கிருந்து சேலம் செல்ல கோவை வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். நேற்று நள்ளிரவு இத்தகவல் பெருந்துறை போலீசாருக்கு கிடைத்ததால் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தனர்.

இரவு சுமார் 2 மணியளவில் பெருந்துறை சிப்காட் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் நிரப்பியபோது போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி ராஜ்குமார் முன்னிலையில் கார் சோதனையிடப்பட்டது. காரின் டிக்கியில் வீட்டின் பூட்டை உடைக்க 10 க்கும் மேற்பட்ட இரும்பு ராடுகள்,8 செல்போன்,வைர நகைகள்,தங்க நகைகள்,வெள்ளி  பாத்திரங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஏராளமாக இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.


சேலத்தில் உள்ள வக்கீல் ஒருவரிடம் 10 லட்ச ரூபாய் கொடுத்து மணிகண்டன் காரை வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள பூட்டிய வீடுகளை ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிப்பது தான் இவரது வாடிக்கை. இவரை குற்றப்பிரிவு ஏ சி சோமசுந்தரத்திடம் காருடன் பெருந்துறை போலீசார் ஒப்படைத்தனர். இவரது கூட்டாளியிடம் கைப்பற்றபட்ட நகைகள் மற்றும் தற்போது பிடிபட்ட நகைகளை மதிப்பீடு செய்யும் பணி முடிந்து மொத்த மதிப்பு கோவை மண்டல டிஐஜி மூலம் வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com