காரைக்குடி அருகே பள்ளத்தூரில் அரசு மதுபான கடையில் பணியாற்றிய ஊழியர் அர்ஜுனன் என்பவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது எதிர்பாரா மரணத்தையடுத்து, சிவகங்கை மாவட்டம் முழுவதும் அரசு மதுபான கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் அரசு மதுபான கடையில், கடந்த 3 ம் தேதி இரவு மண்ணெண்ணெய் பாட்டில் வீசினார் அடையாளம் தெரியாத நபரொருவர். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்து, மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார் ஊழியர் அர்ஜுனன் என்பவர். அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் பரவியதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு மதுபான கடை சூப்பர்வைசர்கள், ஊழியர்கள் அனைவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் குவிந்தனர்.
இதில் இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 134 அரசு மதுபான கடைகள் மூடப்பட்டு, அதில் பணிபுரியும் 650 ஊழியர்களும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இவ்விவகாரத்தில் போலீஸ் விசாரணை தொடர்ந்துவருகிறது.