கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, ராணுவ வீரரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி வார்டு கவுன்சிலர் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி, எம்.ஜி.ஆர். பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (33), இவரது தம்பி பிரபு (29), இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 08.02.2023 அன்று காலை பிரபாகரன் அவரது வீட்டின் அருகே உள்ள நீர்தேக்க தொட்டி அருகே துணி துவைத்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1ஆவது வார்டு கவுன்சிலர் சின்னசாமி (50), குடிநீர் எடுக்கும் இடத்தில் துணி துவைப்பது சரிதானா என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதுசம்மந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கோபத்தில் அங்கிருந்து சென்ற கவுன்சிலர் சின்னசாமி, அன்று மாலை மீண்டும் தனது உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் வந்து, பிரபாகரன் மற்றும் பிரபு ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரபு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வழக்கை விசாரித்த நாகரசம்பட்டி போலீசார், பிரபு உயிரிழந்ததை அடுத்து கொலை வழக்காக பதிவு செய்த நிலையில், தலைமறைவாக இருந்த தி.மு.க., கவுன்சிலர் சின்னசாமி (50), கவுன்சிலரின் மகன்கள் ராஜபாண்டி (30), குரசூரியமூர்த்தி (27), குணநிதி (19), புலிபாண்டி (22) மற்றும் கவுன்சிலரின் உறவினர்களான மணிகண்டன் (60), வேடியப்பன் (54), சின்னசாமி (60), காளியப்பன் (50) ஆகிய 9 பேரை கைது செய்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.