புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் தவறான உறவில் இருந்து வந்த காசாளரின் செயல்கள் அவரது மனைவியின் மூலம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.
விராலிமலை இந்தியன் வங்கியின் காசாளராக இருப்பவர் எட்வின் ஜெயக்குமார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனாலும் அவர் இல்வாழ்க்கையில் நாட்டமில்லாமல் இருந்துள்ளார். மேலும் தனி அறையில் 15 செல்போன்களை வைத்துக் கொண்டு, வாட்ஸ் அப்பில் மூழ்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அவர் செல்போனில் யாரிடமோ ஆபாசமாக உரையாடி கொண்டிருப்பதைப் பார்த்த எட்வின் ஜெயக்குமாரின் மனைவி அவரது செல்போன்களை ஆராய்ந்துள்ளார். அதில், கணவர் எட்வின் ஜெயக்குமார் பல பெண்களுடன் தவறான உறவில் இருந்த வீடியோக்கள், உரையாடல்கள், புகைப்படங்கள், பெண்களின் வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்டவை இருந்துள்ளன.
இதுகுறித்து மனைவி கேட்டபோது, கணவர் எட்வின் ஜெயக்குமாரும், மாமியார் லில்லி ஹைடாவும் மிரட்டியுள்ளனர். பின்னர் எட்வின் ஜெயக்குமாரின் மனைவி, தனது தந்தை மற்றும் சகோதரர் மூலம் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதனிடம் புகார் அளித்தார். இதன்பேரில் எட்வின் ஜெயக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது சாதாரண வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையறிந்த எட்வின் ஜெயக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்று தலைமறைவானார். எனினும், அவரது ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் அதே நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், எட்வின் ஜெயக்குமார் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்து கைது செய்ய வல்லம் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், எட்வின் ஜெயக்குமார், அவரது தாய் லில்லி ஹைடா சக ஊழியர் தேவி பிலோமினா உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.