கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வீடு வீடாகச் சென்று பொருட்கள் விற்பனை செய்த சிறுவன், யாருமே பொருட்கள் வாங்காத நிலையில் அழுது கொண்டே பசியால் உணவு கேட்ட பரிதாபம். மனித நேயத்தோடு உணவளித்து ஊருக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது வீட்டில் இருந்த போது அவரது வீட்டிற்கு டிப்டாப்பாக வந்த சிறுவன், மணிகண்டனின் மனைவியிடம் தான் கொண்டு வந்திருந்த வீட்டு உபயோகப் பொருட்களை காண்பித்து விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
ஆனால் அவரோ அந்த பொருட்களை வேண்டாம் என்று சொல்லி சிறுவனை திரும்ப அனுப்பி உள்ளனர். அந்த சிறுவனோ அங்கிருந்து செல்லாமல் அவர்கள் வீட்டின் முன் நின்று அழுதுள்ளார். இதை கவனித்த மணிகண்டன் அந்த சிறுவனை வீட்டிற்குள் அழைத்து வந்து விசாரித்துள்ளார்.
அப்போது அந்த சிறுவன் தான் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த கணபதி என்றும் தனது தந்தை மற்றும் தாயார் கூலி வேலை பார்த்து வருவதாகவும். 10-ம் வகுப்பு முடித்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக கடந்த மூன்று வருடங்களாக தனது தந்தையுடன் சேர்ந்து சித்தாள் வேலைக்கு சென்று வந்ததாகவும் சொல்லியுள்ளார்.
பின்பு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு செய்திதாளில் வந்த விளம்பரத்தை பார்த்து கன்னியாகுமரி குமாரவேல் பகுதியில் இயங்கும் டி.என்.பி.எல் அங்காடியில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்துள்ளார். அவர்கள் தரும் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்தால், இரவு ஒருவேளை மட்டும் உணவு கொடுத்துள்ளனர். அப்படி பொருட்கள் விற்பனையாகவில்லை என்றால் இரவு உணவும் தராமல் தண்டனையும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொருட்கள் ஏதும் விற்பனையாகததால் மூன்று நாட்களாக பட்டினியாக இருப்பதாக கூறி வயிற்று பசியால் அழுதுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனுக்கு உணவளித்த மணிகண்டன் மற்றும் சிங் ஆகியோர் அந்த சிறுவனை தக்கலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அந்த விற்பனை நிறுவனத்தின் மீது புகார் அளித்ததோடு அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அந்த நிறுவனத்தில் இதுபோல் 20-க்கும் மேற்பட்ட சிறுவர்களை பணியில் அமர்த்தி உள்ளதாகவும். அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மணிகண்டனின் இந்த மனித நேய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.