செய்தியாளர்: டேவிட்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (42). கூலித் தொழிலாளியான இவருக்கு சசிகலா (34) என்ற மனைவியும், பிரித்திக்ஷா (9) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், திருமலைசாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு நடந்து வருவது வழக்கமாக இருந்து உள்ளது.
இதையடுத்து தீபாவளியன்று மதியம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கணவர் திருமலைச்சாமி கையில் இருந்த கம்பால் மனைவி சசிகலாவை அடித்துள்ளார். இதனால் சசிகலா மயங்கி கீழே விழுந்துள்ளார். இது குறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சசிகலாவை சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து சசிகலாவின் தயார் பார்வதி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி, விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், திருமலைசாமியின் மனைவி சசிகலா செயற்கை பல்கட்டி இருந்ததாகவும், கணவர் அடித்த அடியில் வாயில் இருந்த பல்செட் கழன்று தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமலைச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.