ஐதராபாத் நகரில் 19 வயது இளம் பெண், தன் தாய் திட்டியதால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐதராபாத் நகரைச் சேர்ந்தவர் சாய் துர்கா மவுனிகா. துண்டிகல் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டில் தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். அவரது தந்தை சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். கடைசி வருடம் பொறியியல் படிப்பு படித்து வரும் சாய் துர்கா, தனது வீட்டில் கடந்த புதன்கிழமை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் தமது வாட்ஸ் அப்பில் கருத்து ஒன்றினை பதிவு செய்து இருந்தார். அதில், ‘சமீக காலமாக நான் மகிழ்ச்சியாக இருக்க பயப்படுகிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது மற்றவர்கள் ஏன் பார்க்க விரும்புவதில்லை என்பது எனக்கு தெரியவில்லை. என் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது குறித்து வீடியோ பதிவிட்டு இருந்தார்.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதிலும், சமூக வலைதளங்களிலும் அதிக நேரம் செலவிடுவதாக அவரது தாய் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தங்க சங்கிலி மற்றும் மோதிரம் தொடர்பாக சாய் துர்காவுக்கும் அவரது தாயாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வெளியே சென்று வீடு திரும்பிய தாய், மகள் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ‘துர்கா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி வந்தார். தங்க நகை தொடர்பாக அவரது தாய் கேள்வி எழுப்பியதால் மிகவும் டென்சனாக இருந்தார். இதனால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்’ என்றனர். அவரது மொபைல் போன் மற்றும் சமூக வலைதளை பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.