கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகளுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 22-ம் தேதி 7 கொலைகளும், 23-ம் தேதி 5 கொலைகளும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஊடகங்களால் பட்டியலிடப்பட்டவை ஆகஸ்ட் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில் நடந்த நிகழ்வுகள் எனவும், அதில் பெரும்பாலான கொலைகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனி நபர்களின் முன் விரோதத்தால் நடந்தது எனவும் தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 940 கொலைகள் நடந்துள்ளதாகவும், கடந்த 2021-ம் ஆண்டு 925 கொலைகள் நடந்துள்ளதாகவும், கடந்த 2019-ம் ஆண்டு 1041 கொலைகளும் நடந்துள்ளதாகவும், 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 101 கொலைகள் இந்த அண்டு குறைந்துள்ளதாகவும் தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
முன்னதாக அதிமுகவின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் கொலைக்களமாக மாறி வருவதாகவும், இதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். சட்டம் ஒழுங்கை தாமே நேரடியாக கவனித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூறியதை எடப்பாடி பழனிசாமி நினைவுக்கூர்ந்து இருந்தார்.
இதுதான் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? எனக் கேள்வி எழுப்பியதுடன் இந்த படுகொலைச் சம்பங்களுக்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். மேலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தவிர்த்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.