தாராபுரத்தில் கடை ஊழியரை, உரிமையாளரே கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் பேருந்து நிலையத்தில் சீனிவாசன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இங்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19) உட்பட சிலர் வேலை பார்த்தனர். கடந்த 22 ம்தேதி மணிகண்டன் தங்கி இருந்த அறைக்குள் வந்த ஒரு கும்பல் மணிகண்டனை தாக்கிவிட்டு தப்பியோடி விட்டது. மணிகண்டனுடன் தங்கியிருந்த வெங்கடேஷ் இதுகுறித்து கடை உரிமையாளருக்கு தகவல் தந்தார். மயங்கிகிடந்த மணிகண்டனை தாராபுரம் அரசுமருத்துவமனைக்கு அழைத்துசென்று முதலுதவி செய்த பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் 23ம்தேதி மணிகண்டன் உயிரிழந்தார்.
மணிகண்டன் சாவில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், 24ம் தேதி 4 இளைஞர்கள் தாங்கள்தான் மணிகண்டனை தாக்கியதாக கூறி ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், தொழிலுக்கு இடையூறு செய்ததால் கடை உரிமையாளர் சீனிவாசனே , மணிகண்டனை ஆட்களை வைத்துக் கொன்றது தெரியவந்தது.
சீனிவாசனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.