கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (39). தென்னை ஏறும் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கம் என்பவருக்கும் கடந்த 2009-ல் திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு 11-வயதில் ராகுல் என்ற மகனும் 10-வயதில் தனுசியா என்ற மகளும் உள்ளனர்.
ராஜசேகர் குடிபழக்கத்திற்கு அடிமையான நிலையில் அந்த குடும்பம் வறுமையில் வாடி வந்ததாக தெரிகிறது. சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் நிலையில் கணவரின் வருமானம் போதாததால் தங்கம் அருகில் உள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இவர் வேலைக்குச் செல்ல தொடங்கியது நாள் முதல் மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த ராஜசேகர் மது போதையில் மனைவி தங்கத்தை அடிக்கடி அடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, வேலைக்குச் சென்ற தங்கம் மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது ராஜசேகர் மனைவியிடம் இனிமேல் வேலைக்கு செல்லக்கூடாது என தகறாறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இரவு குழந்தைகள் இரண்டு பேரையும் தனி அறையில் தூங்க வைத்த ராஜசேகர் மற்றொரு அறையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் தேங்காய் வெட்ட பயன்படுத்தும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் தங்கம் இரத்த வெள்ளத்தில் கட்டிலிலேயே உயிரிழந்த நிலையில் வெளியே வந்த ராஜசேகர், வீட்டு வராந்தா உள்ள உத்திரத்தில் நைலான் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் அவர்களது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி நடத்தை மீது சந்தேகமடைந்து மனைவியை வெட்டி கொலை செய்த தென்னை ஏறும் தொழிலாளி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.