ஈரோட்டில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை, இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இருவரை கைது செய்த போலீசார், சுமார் 2800 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ராயப்பம்பாளையம் புதூரில் திலீப்குமார் மற்றும் வினித்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளர்களான இவர்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணை முடிவில், இவர்கள் `அறுவை சிகிச்சையின் போது மயக்க நிலைக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை, போதைக்காக குளுக்கோஸில் கரைத்து ஊசி மூலம் நரம்புகளில் ஏற்றிக் கொள்கின்றனர்’ என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
தங்களின் இந்த நடவடிக்கையை கல்லூரி மாணவர்கள் - மாணவிகளுக்கும் இவர்கள் கொண்டு போய் இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மாணவ - மாணவியர், போதைக்காக மாத்திரைகளை வாங்கி வந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த போதை மாத்திரைகளை குறைந்த விலையில் பெரு நகரங்களில் இருந்து பெற்று, பல மடங்கு அதிக விலைக்கு இவர்கள் விற்பனை செய்ததும் அம்பலமாகியிருக்கிறது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து சுமார் 2,800 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். இளைஞர்கள் போதைக்காக அடுத்தக் கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் இத்தகைய செயல்பாடுகளை தடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.