தேனி அருகே கந்துவட்டிக் கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தனர். இது தொடர்பாக 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாரியம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இவர்களை மீட்ட உறவினர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு முயன்ற சரவணன், சிலமலையைச் சேர்ந்த சுருளிராஜ் என்பவரிடம் 60 சதவிகித வட்டிக்கு 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அசலையும், ஒருலட்சத்து 75ஆயிரம் ரூபாய் வட்டியையும் அவர் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கடன் வாங்குவதற்காக சரவணன் கையெழுத்திட்ட 7 காசோலைகளையும், 2 புரோ நோட்டுகளையும் சுருளிராஜ் திருப்பித்தர மறுத்துள்ளார். மேலும், சரவணன் மீது சுருளிராஜ் பணமோசடி வழக்கு பதிவும் செய்துள்ளார். இந்நிலையில் சுருளிராஜிற்கு ஆதரவாக அவரது ஆட்கள் 5 பேர் சரவணனின் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர். இது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் சரவணன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அவர் இன்று குடும்பத்தோடு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.