’போலீசை கத்தியால் குத்துவேன்; நான் ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’ - மாணவன் மிரட்டல்

’போலீசை கத்தியால் குத்துவேன்; நான் ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’ - மாணவன் மிரட்டல்
’போலீசை கத்தியால் குத்துவேன்; நான் ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’ - மாணவன் மிரட்டல்
Published on

போலீசை கத்தியால் குத்துவேன், நான் ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில், போட்டா பெயில் என்று மிரட்டி பேசும் மாணவனுக்கு பயந்து தேனி மாவட்டத்தில் 3 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு இல்லை என மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

தேவதானபட்டியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவனின் ஒழுக்கமின்மையை அவரது பெற்றோரிடம் கூறியதாகவும், இதனை அறிந்த அந்த மாணவன் வகுப்பறைக்கு கையில் கத்தியோடு வந்து சம்மந்தபட்ட ஆசிரியையை குத்த முயற்சி செய்தபோது, சக ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியையின் வாகனத்தை கத்தியினால் குத்தி சேதபடுத்தி விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் மறுநாள் வந்து அந்த ஆசிரியையை கத்தியால் குத்த முயல, மிரண்டு போன ஆசிரியை காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். மேலும், மீண்டும் நாளை பள்ளிக்கு சென்றால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என வேதனையுடன் கண்ணீர் விட்டு புலம்புகிறார் அந்த பெண் ஆசிரியை.

இதேபோன்று பெரியகுளம் அருகே உள்ள ஜி கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசி கிண்டல் செய்யும் நிகழ்வும் நடந்து வந்துள்ளதாக அப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் ஒருபுறம் என்றால், தேவாரம் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பணியிட மாறுதல் பெற்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஒருவர் பள்ளியில் மாணவர்கள் புத்தகம் கொண்டுவராமல் இருப்பதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த ஒரு மாணவர் ஆசிரியரை பள்ளி வகுப்பறையிலே சக மாணவர்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்துள்ளான். இதனை சற்றும் எதிர்பார்க்காத இந்த ஆசிரியர் நிலைகுலைந்து அவமானத்தோடு வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் மூன்று அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பள்ளியில் எவ்வித மரியாதையும் இல்லை எனவும், பணி பாதுகாப்பும் இல்லை என புலம்புகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள். இதனால் இந்தப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக கூடி தங்களுக்கு மாணவர்களால் பள்ளியில் பணி பாதுகாப்பு இல்லை என்றும், உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்றும் கூறி தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தை முற்றுகையிட்ட போராட்டம் செய்துள்ளனர்.

தங்களை மாணவர்களிடம் இருந்து பாதுகாக்கக் கோரி அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தங்களின் கோரிக்கை மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தப் போவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். முன்பெல்லாம் பள்ளியில் கண்டிப்பான ஆசிரியர்களுக்கு பயந்து மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த காலம் போய், மாணவர்களுக்கு பயந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் நிலை அரசு பள்ளிகளில் உருவாகி உள்ளது இன்றைய சூழ்நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com