போக்சோ வழக்குகளை கையாள பெண் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி: சென்னை காவல் ஆணையர்

போக்சோ வழக்குகளை கையாள பெண் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி: சென்னை காவல் ஆணையர்
போக்சோ வழக்குகளை கையாள பெண் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி: சென்னை காவல் ஆணையர்
Published on

போக்சோ வழக்குகளை விசாரிக்கும் பெண் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் காவல்துறையினர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் மேற்பட்ட சென்னை காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 38 காவலர்கள் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் கொரோனா நோயில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிக்காமல் தடுக்க பரிசோதனை முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை முகாமை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் மேடையில் பேசுகையில், "சென்னையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் நரியங்காடு, ராயபுரம், புது வண்ணாரபேட்டை, மவுண்ட் உட்பட 9 இடங்களில் மருத்துவ பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 6 ஆம் தேதி வரை இந்த மையம் செயல்படும். சென்னையில் பணிபுரியக்கூடிய காவலர்கள் 95 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசியும், 66 சதவிகிதம் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போடாத காவலர்கள் உடனடியாக போட்டுகொள்ளும் படி உயரதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்" என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், "சென்னையில் அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக பரவுவதால் அதை கண்டறிந்து 9 இடங்களை ஏற்கனவே மூடி விட்டோம். கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் "வார் ரூம்" ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. 30 போலீசாருக்கு சாப்ட்வேர் குறித்த பயிற்சியை வழங்கி உள்ளோம். சென்னை எல்லைக்குட்பட்ட இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவரது செல்போன் எண் மூலமாக கடந்த 5 நாட்களில் தொடர்பில் இருப்பவரை கண்டறியும் பணியில் ஈடுபட உள்ளோம்.

அதே போல் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகிய பின்னர் 15 நாட்கள் வீட்டு தனிமையில் இல்லாமல் வெளியே சுற்றக்கூடிய நபர்களையும் செல்போன் எண் மூலமாக டிராக் செய்யும் பணியில் வார் ரூம் இயங்கி வருகிறது.

பெண்கள் தொடர்பான வழக்குகளை கையாள பெண் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்க உள்ளோம். போக்சோ உட்பட பெண்கள் தொடர்பான வழக்கை முறையாக கையாளுவது எப்படி, விசாரணை அதிகாரி யார், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து 8ஆம் தேதி முதல் பெண் போலீசாருக்கு முழு பயிற்சி வழங்க உள்ளோம். எஸ்.பி.ஐ ஏடி எம் கொள்ளை வழக்கில் சிபிஐக்கு திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக 16 மாநிலங்களில் கொள்ளை நடந்திருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. அதனால் 16 மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. வரக்கூடிய பதிலை பொறுத்து முடிவு எடுக்க உள்ளோம். கொரோனாவால் பலியான காவலரின் குடும்பத்தினருக்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை முறைப்படி சென்றடையும். அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

சத்தியம் டிவி விவகாரம் தொடர்பாக பேசிய காவல் ஆணையர், “சத்தியம் டிவி சூறையாடிய நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனதளவில் ராஜேஷ்குமார் பாதிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com