அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 34 லட்ச ரூபாய் அளவுக்கு கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் 58 கோடியே 23 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது வருமானத்தை விட 3 ஆயிரத்து 982 சதவிகிதம் கூடுதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில், குனியமுத்தூர் அருகே மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணியின் வீடு உள்ளிட்ட 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வேலுமணியின் சகோதரர் அன்பரசன், உதவியாளர் சந்தோஷ் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களும் அடங்கும். சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள், திருப்பத்தூரில் இரண்டு இடங்கள், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடங்களிலும், கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அதில், 11 புள்ளி ஒன்று ஐந்து கிலோ தங்க நகைகள், 118 புள்ளி ஐந்து கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணக்கில் வராத 84 லட்ச ரூபாய் பணம், மடிக்கணினி, கணினி ஹார்ட் டிஸ்க்குகள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் 34 லட்ச ரூபாய் முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் இந்த வழக்கு, புலன்விசாரணையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.