நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான புகார் குறித்த விசாரணைக்கு நடிகர் சூரி, மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, "தப்பு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது" என தெரிவித்துள்ளார் அவர்.
சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் சூரி அளித்த அந்த பண மோசடி புகாரில் குறிப்பிடப்பட்ட முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை.
சூரி அளித்த புகாரை விசாரித்ததான் அடிப்படையில், அதில் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியது சென்னை உயர் நீதிமன்றம். மேலும் அந்த விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த வழக்கிற்காக நடிகர் சூரி நேற்று இரவு சென்னை மத்திய குற்றப்பிரிவின் துணை ஆணையர் மீனா முன்னிலையில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகர் சூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "என்னுடைய வழக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பண விவகாரத்தில் நான் ஏமாந்து உள்ளேன். இந்த வழக்கு அடையாறு காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்து உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தேன். திருப்திகரமான விசாரணை நடைபெறவில்லை என கோரிக்கை வைத்து அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது துணை ஆணையர் தலைமையிலான விசாரணை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக இன்று விசாரணைக்காக ஆஜரானேன். நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மட்டுமே நம்பி உள்ளேன். இன்று விசாரணை நன்றாகவே நடந்தது. 2 ஆண்டு காலமாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. என்னை காவல்துறை அழைத்தபோது நேரில் ஆஜராகி அனைத்து பதில்களும் தெரிவித்துள்ளேன். தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. எதிர் தரப்பிலும் விசாரணை நடைபெறுவதாக தான் நினைக்கின்றேன்" என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.