வேலூர் மாவட்டம் அரக்கோணம் கிரிபில்ஸ் பேட்டை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் அரக்கோணம் நகராட்சியில் ஒப்பந்த பணியில் இருந்து ஒய்வு பெற்றவர். இவருடைய மனைவி துர்க்காதேவி. இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். முதல் மகன் நந்தகுமார் திருமணம் ஆகாமல் தந்தை, தாயின் தயவுடன் வசித்து வருகிறார்.
இரண்டாவது மகன் ஆட்டோ ஓட்டுநர் ரகுநாதன். 3வது மகன் ஸ்ரீதர், வேலூர் மாவட்டம் ஆற்காடு வன சரகத்தில் வனச்சரகராக பணியாற்றிவருகிறார். 4வது மகன் அருள்குமார் தனியார் கம்பெனியில் பணியில் உள்ளார். நந்தகுமாரை தவிர மற்ற மூன்று பேரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் வீட்டில் தனியாக டிவி சீரியல் பார்த்துகொண்டு இருந்த அண்ணாமலையிடம், நந்தகுமார் குடித்து வந்து ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவிக்க இருவருக்குள்ளும், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்ற, வீட்டில் இருந்த இரும்புக் குழாயை எடுத்து தந்தையின் தலையில் அடித்துள்ளார் நந்தக்குமார். இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை, வலி தாங்காமல் கத்திக் கதறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் குடியிருந்த மூன்றாவது மகன் ஸ்ரீதர் ஓடிவந்துள்ளார். அதற்குள் நந்தக்குமார் அங்கிருந்து ஓடிவிட்டார். வேகமாக ஓடிவந்த ஸ்ரீதர், தந்தை ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவரை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த நந்தக்குமாரை தேடிவந்தனர். இந்நிலையில் நந்தக்குமார் காவல்நிலையத்தில் சரணடைந்தார். 3வது மகன் ஸ்ரீதர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில், நந்தகுமார் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் கொலை செய்ததற்கு சொத்துத் தகராறு போன்ற வேறேதும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.