செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் புதுடெல்லியைச் சேர்ந்தவர் உட்பட பத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடி நடந்துள்ளதாக சிவகங்கை சேர்ந்த கருப்பையா என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் புகார் மனு கொடுத்தார். தொடர்ச்சியாக இது போன்று வந்த புகார்களை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சைபர் கிரைம் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து குழுவாக பிரிந்து செய்யப்பட்ட சைபர் கிரைம் போலீசார், குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட செல்போனின் ரகசிய குறியீடு எண்ணை பின் தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளான புதுடெல்லியைச் சேர்ந்த ரஹீம் குர்ஷித், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் இவர்களுக்கு தொழிலில் உதவியாகவும், மோசடிக்கு உடந்தையாகவும் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், பலரை மிகத் தீவிரமாக தேடிவரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், 2,500 செல்போன்கள், லேப்டாப், கணினிகள் உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். சைபர் கிரைம் குற்றத்திற்கு எதிராக சிவகங்கை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் நடத்திய இந்த அதிரடி ஆபரேஷன் தமிழகத்திலேயே முதன் முதலாக நடத்தப்பட்டது என ராமநாதபுரம், சிவகங்கை சரக டிஐஜி துரை தெரிவித்தார்.