சென்னை சைதாப்பேட்டை, மாம்பலம், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வயதானவர்கள் மற்றும் அவசரமாக ரயில் ஏறும் பெண்களின் கழுத்தில் அணிந்துள்ள தங்க நகைகள் திருடப்படுவதாக கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதில் கடந்த மாதம் வயதான பெண்மணி ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் நகை மாம்பலம் ரயில் நிலையத்தில் திருடுபோயுள்ளது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில், ரயிலில் ஏற முற்படும்போது இரண்டு பெண்கள் வயதான பெண்மணியின் மீது துப்பட்டாவை வீசி அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மாம்பலம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மதியம் கிண்டி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இரண்டு பெண்கள் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்ததை அறிந்து, சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அப்போது மாம்பலம் ரயில் நிலையத்தில் வயதான பெண்மணியிடம் 5 சவரன் நகை திருடிய பெண்கள்தான் இவர்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த இரண்டு பெண்களையும் கைது செய்த போலீசார், அவர்களை மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் முத்து (எ) ரேகா (33), பேச்சி (எ) கண்மணி (36) என்பதும், ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் ஆந்திராவைச் சேர்ந்த ரயில் நிலைய திருடர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் தாம்பரம், பல்லாவரம், கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட நபர்களின் செயின்களை பறித்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ஒன்றரை சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.