50 ஆண்டுகளாக சென்னையை கலக்கிய பலே திருடன் ‘சில்வர் சீனிவாசன்’

50 ஆண்டுகளாக சென்னையை கலக்கிய பலே திருடன் ‘சில்வர் சீனிவாசன்’
 50 ஆண்டுகளாக சென்னையை கலக்கிய பலே திருடன் ‘சில்வர் சீனிவாசன்’
Published on

திருட்டுத் தொழிலில் வைர விழா காணும் பிரபல கொள்ளையனை காவல்துறையினர் 200-வது முறையாக கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் 50 ஆண்டுகளை நிறைவு செய்து வைர விழா காண்பதை கண்டிருக்கிறோம். ஆனால் திருட்டு தொழிலில் அரைசதம் அடித்து வைரவிழா கண்டவர்தான் 'சில்வர் சீனிவாசன்'. சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் கவனத்தை திசைத் திருப்பி நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிக்கொண்டு தப்பிவிடுவார் இந்த சீனிவாசன். கடப்பாரையை பயன்படுத்தி திருடுவது, பீரோ புல்லிங் என திருடர்கள் தங்களுக்கென ஏதாவதொரு பிரத்யேக முறையை கையாள்வார்கள். இதில் சற்றே வித்தியாசமானவர் சீனிவாசன். ஜோதிடம், ஜாதகம் மற்றும் பரிகார பூஜையை பயன்படுத்தி திருடுவது சீனிவாசன் ஸ்டைல்.

ஓரளவுக்கு வசதியான வீடுகளுக்கு ஜாதகம் பார்க்கவும், தோஷம் கழிக்கவும் செல்லும் சீனிவாசன் தனக்கு யாருமில்லை என முகத்தை பரிதாபமாக வைத்தப்படி கூறுவார். அதை நம்பி அவர் மேல் இரக்கப்படும் பெண்கள் உணவும் தங்க இடமும் கொடுப்பார்கள். வீட்டின் பின்புறம், கார் பார்க்கிங் என கிடைத்த இடத்தில் தங்கும் சீனிவாசன் அதிகாலை 3 மணியளவில் பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள் புகுந்து பூஜை அறையில் இருக்கும் வெள்ளிப்பொருட்கள் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு தப்பிவிடுவார். 80 வயதான சீனிவாசனுக்கு அவரது வயதான தோற்றம்தான் பிளஸ்பாயிண்ட். இந்த வயதிலும் அசராமல் நகைகளை அபேஸ் செய்வதில் சீனிவாசன் கில்லாடி என்கின்றனர் காவல்துறையினர். வெள்ளி பொருட்களை அதிகளவில் திருடியதால் சீனிவாசனுக்கு காவல்துறையினர் வைத்த பெயர் 'சில்வர் சீனிவாசன்'.

சென்னை சங்கர் நகரில் தோஷம் கழிப்பதாகக்கூறி நகையை திருட முயன்ற சீனிவாசனை பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீனிவாசன் மயிலாப்பூரில் உள்ள வீடு ஒன்றில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சீனிவாசன் மீது இதுவரை 224 திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. இனியாவது சீனிவாசனின் திருட்டுக்கு காவல்துறை எண்ட் கார்டு போடுமா? என்பது தான் சென்னை மக்கள் எழுப்பும் கேள்வி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com