செய்தியாளர்: ஸ்ரீதர்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள போலியான சான்றிதழ்கள், கோவிலாம் பூண்டி பகுதியில் சாக்குப்பையில் சாலை ஓரத்தில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மூலமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், போலி சான்றிதழ் தயாரித்த சிதம்பரத்தைச் சேர்ந்த சங்கர், நாகப்பன், அருள் பிரகாசம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
பின் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் போலி சான்றிதழ் தயாரித்தவர்கள் உடந்தையாக இருந்தவர்களை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது நான்காவது நபராக திருச்சியைச் சேர்ந்த அகில இந்திய சித்த மருத்துவ சங்க மாநிலத் தலைவர் சுப்பையா என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்காவதாக ஒருவர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.