அப்பாவி இளைஞரை 3 மணி நேரம் கட்டிவைத்து அடித்த நபர்: சமூக வலைதளங்களில் வைரலான அதிர்ச்சி வீடியோ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி - ராசாத்தி தம்பதியரின் மகன் ஐயப்பன். இவர் கிராமத்தில் வெகுளித்தனமாகவும், சிறுவர்களிடம் அதிகம் பழகக்கூடியவராகவும் அதேபோல் கிராமத்தில் உள்ளவர்கள் வேலை சொன்னால் உடனே செய்பவராகவும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐயப்பனின் அம்மா (ராசாத்தி) மனவளர்ச்சி குன்றியவராக இருந்துவந்துள்ளார். இதனால் ஐயப்பன்தான் குடும்பத்துக்கு எல்லா வேலைகளையும் பார்த்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஐயப்பனின் செல்போனை வாங்கி பேசிய வேறொரு நபர், அருணாச்சலம் என்பவரின் மகன் ஆகாஷிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இந்த விஷயம் ஐயப்பனுக்கு தெரியாத நிலையில், செல்போனில் ஆபாசமாக பேசியது ஐயப்பன் தான் என ஆகாஷ் நினைத்துக் கொண்டு முன்விரோதத்தை வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் போனில் பேசியதை மனதில் வைத்துக் கொண்டு ஆகாஷ் நேற்று மாலை ஐயப்பனை தனது இருசக்கர வாகனத்தில் தொண்டனந்தல் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஐயப்பனின் கை கால்களை கட்டிவிட்டு ‘நீதானே என்னை போனில் ஆபாசமாக திட்டியது’ என கஞ்சா போதையில் மூன்றுமணி நேரமாக அங்கு கிடைத்த முட்களாலும், தடியினாலும் கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் ‘இதுகுறித்து ஊருக்குள் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன்’ என மிரட்டியுள்ளார் ஆகாஷ். இது எதுவுமே புரியாத நிலையில், ஊருக்குள் ஐயப்பன் மீண்டும் வெகுளித்தனமாக சிறுவர்களுடன் விளையாடியுள்ளார்.
அப்போது சிறுவர்கள் ஐயப்பன் மீது கையை போட்டுள்ளனர். அப்போது ‘டேய் அங்க வலிக்குதுடா’ என்று ஐயப்பன் சொல்லி உள்ளார். இதைக்கேட்ட கிராம இளைஞர்கள், ஐயப்பனின் சட்டையை கழற்றி பார்த்துள்ளனர். அப்போது உடல் முழுவதும் காயங்கள் தென்பட்டுள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம இளைஞர்கள், முதற்கட்ட உதவியாக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதோடு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது ஐயப்பன் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஐயப்பன் தாக்கப்பட்டு உடல் முழுவதும் காயம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர்கள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. இந்நிலையில், ஐயப்பனை தாக்கிய நபரை போலீசார் நேற்றிரவு கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.