மும்பைக்கு அருகில் உள்ள மீரா சாலை பகுதி கீதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்துவந்த சரஸ்வதி வைத்யா (32) என்ற பெண்ணை, எண்ணவே முடியாத துண்டுகளாக கொடூரமாக வெட்டி, வேகவைத்து, மிக்ஸியில் அரைத்து அப்புறப்படுத்த முயன்ற மனோஜ் ரமேஷ் சானே(56) என்பவரை கடந்த வியாழன் அன்று மும்பை போலீசார் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையின் போது, தனக்கு எச்.ஐ.வி-பாசிட்டிவ் என்றும், உடல் நலம் சரியில்லை என்றும், கொலை செய்யப்பட்ட வைத்யா தற்கொலை தான் செய்துகொண்டார் என்றும், அவள் தன் மகளை போன்றவள் எனவும் அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்களை சானே தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இளம் காதல் ஜோடிகளான ஷ்ரத்தா வாக்கர் மற்றும் அப்தாப் அமீன் பூனாவல்லா இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்த போது, காதலி ஷ்ரத்தா காதலன் பூனாவல்லாவால் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு மறைக்கப்பட்டார். கடந்த 2022 மே மாதம் 18ஆம் தேதி வாக்கரை கொலை செய்து, உடலை பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்த அப்தாப், அதன்பிறகு 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் பல பகுதிகளில் வீசி எறிந்தது தெரியவந்தது. மே மாதம் நடந்த இந்த கொடூர கொலையானது, நவம்பர் 14ஆம் தேதிதான் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தச் சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போதும் அதே போன்று ஒரு பெண் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட கொடூரம் மும்பையில் அரங்கேறியுள்ளது. சரஸ்வதி வைத்யா (வயது 32) மற்றும் மனோஜ் சனே (56) இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்துவந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக லிவிங் டூகெதரில் வாழ்ந்துவந்ததாக கூறப்படும்நிலையில், தற்போது சரஸ்வதி வைத்யாவின் மரணம் கொடூரமான முறையில் நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை இரவு இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வெளிவர, மனோஜின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸூக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கைக்கு பிறகு இந்த அதிர்ச்சியான சம்பவம் வெளிவந்துள்ளது.
சரஸ்வதி வைத்யாவின் மரணம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, புதன்கிழமை இரவு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரி, விசாரணையின் போது சானே கூறிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
அதன் படி, ரூ.4000 விலை மதிப்புள்ள மரம் வெட்டும் மின்சார ரம்பம் ஒன்றை விலைக்கு வாங்கிய சானே, 200 வோல்டேஜ் மின்சாரம் வெளிப்படக்கூடிய ரம்பத்தால் உடலை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டியுள்ளார். அதன் பிறகு, உடல் பாகங்களை ஒரு பிரஷர் குக்கரில் வேகவைத்த அவர், அவற்றை நாற்றம் வெளிவராமல் எளிதாகக் கொட்டுவதற்காக உடல் பாகங்களை வறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சமையலறையில் உள்ள ஒரு வாளி, தொட்டி, குக்கர் மற்றும் பிற பாத்திரங்களில் உடல் துண்டுகளை சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவை அனைத்தும் காவல்துறையினரால் கணக்கிட முடியாத அளவுக்கு சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததாக ஒரு போலீஸ் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியுள்ளார்.
எஃப் ஐ ஆர்-ல் ஐபிசி பிரிவுகள் (302) கொலை மற்றும் (201) ஆதாரங்களை அழித்தல் முதலியவற்றின் கீழ் போடப்பட்டுள்ளதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு குறித்து பேசியிருக்கும் மீரா ரோடு பகுதி டிசிபி ஜெயந்த் பஜ்பலே, " குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ் சானே, தானே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜூன் 16ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட உள்ளதாக” கூறியுள்ளார்.
முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மனோஜ் சானே, பல திருப்பங்களை ஏற்படத்தக்கூடிய வாக்குமூலங்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி,
* நான் சரஸ்வதி வைத்யாவை கொலை செய்யவில்லை. கடந்த ஜூன் 3ஆம் தேதி நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்து பார்த்த போது, அவர் தரையில் வாயில் நுரை தப்பியவாறு மயங்கி கிடந்தார். நான் சென்று அவரை சரிபார்த்த போது, ஏற்கனவே அவர் இறந்திருந்தது எனக்கு தெரிந்தது. இது வெளியில் தெரிந்தால் ஒருவேளை நான் கொலை குற்றத்தில் மாட்டிக்கொள்வேனோ என்று பயந்துதான், உடலை துண்டாக வெட்டி அப்புறப்படுத்த முயன்றேன் என்று சானே கூறியுள்ளார்.
* உடலிலிருந்து எலும்பு மற்றும் சதையை பிரிப்பதற்காக முதலில் இரண்டு மரம் வெட்டும் மின்சார ரம்பம் கொண்டு உடலை வெட்டியதாகவும், அதற்கு பிறகு அதை குக்கரில் வேகவைத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
* கொலை செய்யப்பட்ட வைத்யா குறித்து கூறியுள்ள அவர், வைத்யா தன்மீது அதிகப்படியான பொசசிவ் உடன் இருந்ததாகவும், தான் வீட்டிற்கு தாமதமாக வந்தால் கூட அவருக்கு நான் துரோகம் இழைத்துவிட்டதாக சண்டை போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
* 2008ஆம் ஆண்டு தனக்கு ஹச்வி பாசிட்டிவ் இருப்பது தெரியவந்ததாகவும், அதற்காக மருந்து உட்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், ஒரு விபத்தின் போது தான் தனக்கு நோய் தொற்று பாதிக்கப்பட்ட ரத்தம் தவறுதலாக செலுத்தப்பட்டதாகவும், அதனால் தான் ஹச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.
* மேலும், “இறந்த சரஸ்வதி வைத்யா தனக்கு மகள் போன்றவர் என்றும், எந்த உடல் ரீதியான உறவிலும் தாங்கள் இருக்கவில்லை என்றும்” கூறியுள்ளார்.
* சரஸ்வதி வைத்யா அப்பா அம்மா என யாரும் இல்லாத அனாதை என்றும், அவருக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறவேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும், தான் அவருக்கு கணக்கு பாடம் கற்றுக்கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
சமையலறையில் இருந்து சேகரிக்கப்பட்ட உடல் உறுப்புகள் தடயவியல் ஆய்வுக்காக சர் ஜேஜே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மருத்துவ நிபுணர்களின் உதவியை பெற்று உடலில் எந்தெந்த பாகங்கள் காணவில்லை என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றம் முன்னதாகவே நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், பின்னர் தாமதமாக தான் வெளிப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் தம்பதியரின் குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சமையலறையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம் இருந்தது. போலீஸ் இருப்பதை அறியாத சானே மாலையில் வீடு திரும்பினார். விவரம் அறிந்து அவர் தப்பிச் செல்ல முயன்றபோது பிடிக்கப்பட்டார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் குற்றம் சாட்டப்பட்ட மனோஜிடம் விசாரிக்கப்பட்டபோது, “அவர் முகத்தில் எந்தவித குற்ற உணர்ச்சியும், வருத்தமும் இல்லை” என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.