கோயில் விழாவில் நடனமாடும் இளம் பெண்களை பாலியல் தொழிலுக்கு தூண்டியதாக ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரையடுத்து சிவகங்கை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அறந்தாங்கியை சேர்ந்த ராஜா என்ற நடன ஏற்பாட்டாளர் , நடனமாடும் இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாக பிரச்னை எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து ராஜாவை தாக்கி அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் அப்போது மறைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ராஜா தொடர்ந்து பாலியல் தொழிலுக்கு அழைத்து தொந்தரவு கொடுத்ததையடுத்து, வேறு வழியின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த நடன பெண் ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகம், முதல்வர் தனிபிரிவு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றிற்கு புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் காரைக்குடி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ராஜா, தொலைபேசியிலும், நேரிலும் பாலியல் தொழிலுக்கு அழைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ராஜா மீது சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே ராஜா கொடுத்ததாக ஒரு புகாரை பெற்று, சம்பந்தப்பட்ட இளம் நடன பெண்களை விசாரணைக்கு அழைத்து, விடாமல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சாக்கோட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.