அயனாவரம் அருகே வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமிக்கு உதவுவதாக கூறி அழைத்துச்சென்று ஒருவர் 3 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அவ்வப்போது தன் பாட்டியுடன் சண்டை போடுவது வழக்கம். அதன்படி கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி பாட்டியுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் அந்தச் சிறுமி.
இதையடுத்து அவர் ஆதரவில்லாமல் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சிறுமிக்கு அடைக்கலம் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். கருணை காட்டுவதாக நம்பிய அந்தச் சிறுமி, அவருடன் சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்றதும் வெங்கடேசனின் உண்மையான கொடூர முகம் வெளியே வந்துள்ளது. வீட்டில் உள்ள தனி அறையில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். வீட்டில் இருந்த தாய் எதிர்ப்பு தெரிவித்தும் சிறுமியை வன்கொடுமை செய்து வந்துள்ளார் வெங்கடேசன். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசனின் தாய் சிறுமிக்கு உதவ முன்வந்தார்.
வெங்கடேசன் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்ற நேரம் பார்த்து அந்த தாய், சிறுமியை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். இதையடுத்து திருத்தணி ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுமியை பார்த்த ரயில்வே போலீசார் அவரை மீட்டு சிறுமிக்கு நடந்த கொடூரத்தை கேட்டு தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து ரயில்வே போலீசார், அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மீட்கப்பட்ட சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தந்த வெங்கடேசன் ஆந்திராவிற்கு சென்றுள்ளது தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.