செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
தஞ்சாவூர் - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்தனர். அதில் சோதனை மேற்கொண்ட போது, இரண்டரை அடி உயர பழமையான பெருமாள் உலோக சிலை ஒன்று இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார், தினேஷ், ஜெய்சங்கர், விஜய், ஹரிஷ், அஜித் குமார் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘தினேஷின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன்னதாக வலங்கைமான் அருகில் உள்ள தொழுவூர் ஆற்றில் தூர்வாரும் பணி மேற்கொண்ட போது ஆற்றின் ஓரம் இந்த பெருமாள் சிலை கிடைத்ததாகவும், சிலை கிடைத்தது பற்றி யாருக்கும் தெரிவிக்காமல் தனது மாட்டுக் கொட்டகையில் மறைத்து வைத்திருந்ததாகவும்’ தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது தந்தை இறந்த பின்பு சிலையை தற்போது வெளி நாட்டில் 2 கோடி ரூபாய்க்கு விற்க முயன்றதாகவும் விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். இதில், ஹரிஸ் மற்றும் அஜீத் குமார் ஆகியோர் பாதுகாப்பிற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சிலை 15 முதல் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனவும், சோழர் காலத்தில் செய்யப்பட்ட இந்த சிலையை தமிழகத்தில் உள்ள கோயிலில் இருந்து திருடி இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தனர்.