நேபாளத்துக்கு செம்மரக்கட்டைகள்...சென்னைக்கு கஞ்சா எண்ணெய் - கடத்தல் கும்பல் கைது

நேபாளத்துக்கு செம்மரக்கட்டைகள்...சென்னைக்கு கஞ்சா எண்ணெய் - கடத்தல் கும்பல் கைது
நேபாளத்துக்கு செம்மரக்கட்டைகள்...சென்னைக்கு கஞ்சா எண்ணெய் - கடத்தல் கும்பல் கைது
Published on

செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்று விட்டு நேபாள நாட்டில் இருந்து கஞ்சா எண்ணெய் போதைப் பொருளை சென்னை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற இருவரை சென்னை போலீசார் கைது செய்தனர். இதில் 1.75 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடந்தது என்ன?

சென்னையில் DAD (drive against drug) என போதைப் பொருள் எதிரான நடவடிக்கை என்ற பேரில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் விடுதியில் ஹாசிஷ் எனப்படும் கஞ்சா எண்ணெய் கைமாறுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து தனியார் விடுதியில் பதுங்கி இருந்த இருவரை கைது செய்தனர். விடுதியில் மறைத்து வைத்திருந்த 10 கிலோ ஹாசிஷ் எனப்படும் கஞ்சா எண்ணெய் மற்றும் 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.



விசாரணையில் போதைபொருள் கடத்தி வந்த நபர்கள்  செங்குன்றம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனரான விஜயகுமார், அழகுராஜா என்பது தெரியவந்தது.  இவர்கள் செங்குன்றம் பகுதியிலிருந்து லாரி மூலமாக நேபாள நாட்டிற்கு சென்று, அங்கிருந்து கண்டெய்னர் லாரியில் டெல்லி வழியக கஞ்சா எண்ணெய் எனப்படும் ஹாசிஷ் போதை பொருளை மறைத்து வைத்து  சென்னைக்கு கடத்தி வந்து விற்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த ஹாசிஷ் போதை பொருள் ஒரு கிராம் 1750 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.  சீன நாட்டில் கஞ்சாவிலிருந்து ஹாசிஷ் எனப்படும் கஞ்சா எண்ணெயை தயாரித்து அதை நேபாளம் போன்ற மாநிலத்திற்கு கடத்தி வருவதாகவும், நேபாள நாட்டில் இருந்து, இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு லாரி மூலமாக ஹாசிஷ் போதை பொருள் கடத்தி செல்லப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



கடந்த ஆண்டு நாகப்பட்டினத்தில் ஹாசிஷ் போதை பொருள் கடத்த முற்பட்டபோது பிடிப்பட்ட கும்பல் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் பல கோடி மதிப்பிலான ஹாசிஷ் போதை பொருளை கடத்தி வந்து, காரைக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்துவிட்டு சென்னையில் விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டதாக போலீசார்  தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு 1.75 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பலின் முக்கிய கூட்டாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான விஜயகுமார் முதலில் கன்டெய்னர் லாரி ஓட்டுநராக இருந்ததாகவும், இவ்வாறு போதைப்பொருட்களை நேபாள நாட்டில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் சப்ளை செய்து, அதன் அடிப்படையில் ஐந்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளை வாங்கி, கன்டெய்னர் லாரி ட்ரான்ஸ்போர்ட் அதிபராகும் அளவுக்கு சம்பாதித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னையிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி சென்று டெல்லி வழியாக நேபாள நாட்டிற்கு இந்த கும்பல் கடத்துவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த செம்மரக்கட்டைகள் சீன நாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் சென்னைக்கு வரும்போது கண்டுபிடிக்க முடியாத அளவில் கண்டெய்னர் லாரிகளில் ஹாசிஷ் எனப்படும் இந்த கஞ்சா எண்ணெய் போன்ற போதை பொருள் சென்னைக்கு கடத்தி வருவது தெரியவந்துள்ளது. சுமார் நான்கு வருடத்திற்கு மேல் இதுபோன்று செம்மரக் கட்டைகளை நேபாள நாட்டுக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து போதைப்பொருள் கடத்தி வரும் தொழிலில் ஈடுபட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் இமாச்சல பிரதேச பகுதிகளில் விளையும் கஞ்சாவின் விதையை கையால் நசுக்கி பசை போன்று ஆக்கி ஹாசிஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கின்றனர்.



கஞ்சாவின் கொழுந்துகளை அரைத்து தான் சார்ஸ் போன்ற போதைப் பொருட்கள் தயாரிக்கப் படுவதாகும் தெரியவந்துள்ளது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இங்கு விற்பனை செய்தாலும் ஒன்றே முக்கால் கோடிக்கு விற்பனையாகும் போதைப்பொருள், இலங்கையில் 4 கோடி அளவிற்கு விற்பனையாகும் என்பதால் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் பின்புலத்தில் உள்ளவர்கள் குறித்து கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சிறிய சிறிய பாக்கெட்டுகளில் கொண்டு வருவதால் கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் இருக்கிறது. கைதான 2 பேரின் கூட்டாளிகள் யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாநில நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com